பெண்மையை போற்றும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் - இல.கணேசன் எம்.பி.


பெண்மையை போற்றும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் - இல.கணேசன் எம்.பி.
x
தினத்தந்தி 24 March 2018 10:11 PM GMT (Updated: 24 March 2018 10:11 PM GMT)

பெண்மையை போற்றும் மனப்பான்மை அதிகரிக்க வேண்டும் என பொற்றாமரை விழாவில் இல.கணேசன் எம்.பி. கூறினார்.

சென்னை,

சென்னை, தியாகராயநகரில் உள்ள டேக் அரங்கில் ‘பொற்றாமரை’ அமைப்பு சார்பில் கலை- இலக்கிய விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பா.ஜ.க. மூத்த தலைவரும் ‘பொற்றாமரை’யின் தலைவருமான இல.கணேசன் எம்.பி. தலைமை தாங்கினார்.

பொருளாளர் இல.கோபாலன், பொற்றாமரையின் அறிஞர் குழு உறுப்பினர் கவிக்கோ ஞானச்செல்வன், ம.வெ.பசுபதி, ஆலோசகர் சந்திரா கோபாலன், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘பாரதம் போற்றும் பெண்மையின் மேன்மை’ என்ற தலைப்பில் இல.கணேசன் பேசும்போது கூறியதாவது:-

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள நமது நாட்டின் அடித்தளமாக அமைந்துள்ள பாரம்பரிய பண்பாட்டின் வெளிப்பாடுகளாக விளங்குபவை கலை, இலக்கியங்கள் ஆகும்.

இவற்றின் மூலம் பண்பாட்டை காக்க முனைபவர்களை அடையாளம் கண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைக்கும் பணியை பொற்றாமரை செய்து வருகிறது.

நம் நாட்டில் ஆண்டு கணக்கை சந்திரனின் இயக்கத்தை வைத்து தொடங்குபவர்களுக்கு யுகாதி பண்டிகையும், ஜைனர்களின் பெருமைமிகு மகாவீர் ஜெயந்தியும், ஸ்ரீராமரின் பிறப்பும், உலக பெண்கள் தினமும் இந்த மாதம் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தை கொண்டாடி முடித்துள்ள மகளிர் சக்திக்கு வாழ்த்துகளை கூறும் இந்த நேரத்தில், மகளிருக்கான உரிமை முழுமையாக அளிக்கப்பட வேண்டும். மகளிர் தினம் கொண்டாடும்போது மகளிர் உரிமை குறித்து பேசுவதையும், போராடுவது பற்றியும் மேற்கத்திய நாடுகளில் பேசுகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளை விட மிக பண்டைய காலம் முதல் நம் நாட்டில் பெண்கள் உயர்வாக போற்றப்பட்டு வந்து இருக்கிறார்கள். துரதிர்ஷ்டமாக சிறிய சரிவு ஏற்பட்டு உள்ளது.

அதை மாற்றி மீண்டும் பழைய நிலைக்கு நாம் மாறவேண்டும். அதாவது பெண்மையை போற்றும் மனப்பான்மையை நாம் அனைவரும் பின்பற்றுவதுடன், அதனை அதிகரிக்க வைக்கவேண்டும் என அவர் பேசினார்.

விழாவில், கர்நாடக இசை இளம் கலைஞர்கள் வி.யு.எம்.ஐஸ்வர்யா, சின்மயி (வயலின்), சிவராமன் (மிருதங்கம்) குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி நடந்தது. ‘நற்றிணை’ இலக்கிய அறிமுகம் குறித்து பேராசிரியர் குடவாசல் வீ.ராமமூர்த்தி பேசினார். தொடர்ந்து ஸ்ரீசங்கர மடத்தின் பூஜ்ய மடாதிபதிகள் பற்றி கிருஷ்ணசாமி தயாரித்த ‘ஜெய ஜெய சங்கர’ என்னும் குறும்படம் திரையிடப்பட்டது.

பின்னர், பேராசிரியர் குடவாசல் வீ.ராமமூர்த்தி, கிருஷ்ணசாமி, வி.யு.எம்.ஐஸ்வர்யா, சின்மயி, சிவராமன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் செயலாளர் சிவலிங்கம், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம், எழுத்தாளர் நம்பி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ‘பொற்றாமரை’ நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story