கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ‘திடீர்’ ரத்து


கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ‘திடீர்’ ரத்து
x
தினத்தந்தி 24 March 2018 11:30 PM GMT (Updated: 24 March 2018 10:36 PM GMT)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.

சென்னை,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியை பலப்படுத்தும் வகையில் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். மேலும் கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவ-மாணவிகளோடு கலந்துரையாடி வருகிறார். அப்போது மாணவ-மாணவிகள் தெரிவிக்கும் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கமல்ஹாசன் உற்சாகமாக பதில் அளித்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடுவதாக இருந்தது.

இந்த நிலையில் மாணவர்கள் நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய நிர்வாகம் நேற்று காலையில் திடீரென அனுமதி மறுத்தது. இதனால் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பில் கேட்டபோது, “மாணவர்கள் அழைப்பு விடுத்ததும் கமல்ஹாசன் பங்கேற்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கொடுத்தது.

காலை 10 மணிக்கு தோல் ஆராய்ச்சி நிலையத்தின் டீன் அழைப்பு விடுத்து, நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறு கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்” என்றனர்.

மக்கள் நீதி மய்யத்தில் இணையதளம் மூலமாகவும், அச்சடிக்கப்பட்ட படிவங்கள் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திருச்சி பொதுக்கூட்டம் அடுத்த மாதம் 4-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது.

கடந்த 5-ந் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான அச்சடிக்கப்பட்ட படிவங்களை நற்பணி இயக்க மாவட்ட பொறுப்பாளர்களிடம் கமல்ஹாசன் நேரடியாக வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது கட்டமாக நற்பணி இயக்கத்தை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசனை வழங்கிய கமல்ஹாசன் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதற்காக தலா 37 ஆயிரத்து 500 உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் படிவங்களையும் அவர்களிடம் வழங்கினார்.

Next Story