சேலம் விமான சேவையால் புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும்: முதல் அமைச்சர் பழனிசாமி


சேலம் விமான சேவையால் புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும்:  முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 25 March 2018 5:00 AM GMT (Updated: 25 March 2018 5:00 AM GMT)

சேலம் விமான சேவையால் புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். #EPS #EdappadiPalanisamy

சேலம்,

சேலத்தில் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் கடந்த 1993ம் ஆண்டில் விமான நிலையம் தொடங்கப்பட்டது.  அதன்பின்னர் 2010ம் ஆண்டில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.  இந்த நிலையில் சேலத்தில் மீண்டும் இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது.

சேலம்-சென்னை இடையே விமான சேவையை தொடங்கி வைப்பதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி சேலத்திற்கு வந்தடைந்து உள்ளார்.  அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சிறிய நகரங்களை விமானங்களை கொண்டு இணைப்பதனால் தொழில் வளர்ச்சி மேம்படும்.  விமான சேவையால் சுற்றியுள்ள நகரங்கள் வளர்ச்சி அடையும் என கூறினார்.

7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட உள்ள சேலம் விமான நிலைய சேவையால் நாமக்கல், ராசிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி அடையும்.  62 ஆயிரம் தொழில் முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது.  இதனால் இந்த விமான சேவை முக்கியத்துவம் பெறுகிறது.  

சேலம் விமான சேவையால் புதிய தொழிற்சாலைகள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாகும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு காலை 11.50 மணிக்கு வந்தடையும்.  இதேபோன்று சென்னையில் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்தடையும்.


Next Story