சேலம் விமான சேவை; பயணிகளுக்கு டிக்கெட் நகலை வழங்கி முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்


சேலம் விமான சேவை; பயணிகளுக்கு டிக்கெட் நகலை வழங்கி முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்
x
தினத்தந்தி 25 March 2018 6:04 AM GMT (Updated: 25 March 2018 6:04 AM GMT)

சேலம் விமான சேவையை பயணிகளுக்கு டிக்கெட் நகலை வழங்கி முதல் அமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்துள்ளார். #EPS #FlightService

சேலம்,

சேலத்தில் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் கடந்த 1993ம் ஆண்டில் விமான நிலையம் தொடங்கப்பட்டது.  அதன்பின்னர் 2010ம் ஆண்டில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.  இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் சேலத்தில் மீண்டும் இன்று முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் தங்கமணி மற்றும் இல.கணேசன் எம்.பி. உள்ளிட்டோர் சேலம் வந்தனர்.

டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு விமான சேவையை தொடங்கி வைத்துள்ளார்.  அதன்பின்னர் பயணிகளுக்கு டிக்கெட் நகலை வழங்கி சேலம்-சென்னை இடையேயான விமான சேவையை முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார்.

சேலத்தில் காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு காலை 11.50 மணிக்கு வந்தடையும்.  இதேபோன்று சென்னையில் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்தடையும்.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பழனிசாமி பேசும்பொழுது, மக்களுக்காகவே மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கம் காட்டி வருகிறது.  மத்திய அரசுடன் இணைந்து இருப்பதனாலேயே மக்களுக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும்.  மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதனால் தமிழகத்திற்கு அதிகளவிலான திட்டங்கள் கிடைத்து கொண்டிருக்கின்றன.

மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.  இந்த சேலம் விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய ரக விமானங்களும் இயக்கப்படும்.

பசுமை விரைவு வழித்தடம் அமைந்து விட்டால் 3 மணிநேரத்தில் சென்னையில் இருந்து சேலம் அடையலாம்.

விமானத்தில் பயணிப்பது என்பது ஏழை, எளிய மக்களுக்கு எட்டாத கனியாக இருக்கிறது.  குறைவான செலவில் ஏழை, எளியோர் பயணம் செய்யும் வகையில் இந்த சேவை அமையும்.  இந்த விமான சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி என பேசியுள்ளார்.

Next Story