கோவில் சிலை செய்ததில் மோசடி: முத்தையா ஸ்தபதி கைது


கோவில் சிலை செய்ததில் மோசடி: முத்தையா ஸ்தபதி கைது
x
தினத்தந்தி 25 March 2018 10:15 PM GMT (Updated: 25 March 2018 9:48 PM GMT)

பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்க சிலை செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் பிரபல சிலை செய்யும் நிபுணர் முத்தையா ஸ்தபதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்றுவிட்டார்.

தற்போது புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலிலும் தங்க சிலை செய்ததில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

பழனி முருகன் கோவில் மூலஸ்தானத்தில் புகழ்பெற்ற நவபாஷான சிலை உள்ளது. சித்தர் போகரால் இந்த சிலை செய்யப்பட்டதாக வரலாறு உள்ளது. இந்த நவபாஷான சிலையில் இருந்து முகம், மார்பு, கைகள், இடுப்பு, வயிற்றுப்பகுதி, கால்களில் இருந்து நவபாஷானத்தை சுரண்டி எடுத்து ஒரு கும்பல் சேதப்படுத்தியது.

இதனால் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றிவிட்டு ஒரு அறையில் அச்சிலையை பாதுகாப்பாக வைத்து, அதற்கு பதிலாக 200 கிலோ எடைகொண்ட தங்கம் உள்பட 4 உலோகங்களான புதிய ஐம்பொன் சிலை ஒன்றை செய்து, மூலஸ்தானத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2003-04-ம் ஆண்டில் இருந்து இந்த புதிய சிலையை வைக்க ஏற்பாடுகள் நடந்தது.

ஆனால் இந்த நோக்கத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டது. மிகவும் அரிய நவபாஷான சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பது இத்திட்டத்தின் உள்நோக்கமாகும். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய புகார்கள் வந்தன. இதுபற்றி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இந்து அறநிலையத்துறையின் பிரபல ஸ்தபதியான முத்தையா ஸ்தபதிக்கு சொந்தமான சிற்ப கலைக்கூடம் சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ளது. அங்கு வைத்து இந்த புதிய ஐம்பொன் சிலை செய்ய உத்தரவிடப்பட்டது. முத்தையா ஸ்தபதியின் நேரடி மேற்பார்வையில் இந்த புதிய சிலை செய்யப்பட்டது.

இந்த புதிய சிலை 200 கிலோ எடைக்குள்ளாக தான் இருக்கவேண்டும், ஆனால் அச்சிலை 221.08 கிலோ இருந்தது. ஏன் இவ்வாறு செய்தனர்? என்று விசாரணை நடத்தப்பட்டது. 21.08 கிலோ கூடுதலாக புதிய சிலை செய்யப்பட்டது. எனவே இந்த புதிய சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப குழுவினர் இந்த சிலையை ஆய்வு செய்ததில், ரூ.1.31 கோடி அளவில் மோசடி அரங்கேற்றப்பட்டது தெரியவந்தது. இதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை சூப்பிரண்டு கருணாகரன் ஆகியோர் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தனர். முத்தையா ஸ்தபதி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார். 14 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த குற்றம் நடந்தபோது பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அவர் தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் என்று கூறப்படுகிறது. கைதான முத்தையா ஸ்தபதியை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.

மேற்கண்ட தகவல்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

Next Story