8 மணி 25 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்த போலீஸ்காரர்


8 மணி 25 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்த போலீஸ்காரர்
x
தினத்தந்தி 25 March 2018 10:45 PM GMT (Updated: 25 March 2018 9:54 PM GMT)

இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடல் பகுதியை 8 மணிநேரம் 25 நிமிடத்தில் நீந்தி ஆந்திர மாநில போலீஸ்காரர் புதிய சாதனை படைத்தார்.

ராமேசுவரம்,

ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் துளசி சைதன்யா (வயது 29) அங்கு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர், இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை நீந்தி கடக்க திட்டமிட்டு நேற்றுமுன்தினம் ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் இருந்து மீன்பிடி படகில் இலங்கை தலைமன்னார் பகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

பிறகு நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்து நீந்த தொடங்கிய துளசி சைதன்யா நேற்று காலை 9.25 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தார். 33 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 25 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை புரிந்துள்ள இவரை அவருடைய பெற்றோர்கள் ராமகிருஷ்ணன், சசிபாலகுமாரி, சகோதரி மவுனிகா, மீன்துறை துணை இயக்குனர் ஐசக்ஜெயக்குமார், மீனவர் சங்க தலைவர் போஸ் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரவேற்றனர்.
இதுகுறித்து துளசிசைதன்யா கூறியதாவது.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். உலகில் உள்ள 7 கால்வாய்களையும் நீந்தி கடக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாகும். ஏற்கனவே ஆந்திரா, விசாகப்பட்டினம் கடல்பகுதியில் பல முறை நீந்தி உள்ளேன்.

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே நீச்சல் அடிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். மற்ற கடல் பகுதியை விட இந்த கடலில் ஜெல்லி மீன்கள் அதிகமாக உள்ளதாலும், கடல் அலை, நீரோட்டம் அதிகமாக உள்ளதாலும் நீந்துவது கஷ்டமாக உள்ளது. குறுகிய நேரத்தில் இந்த கடலை நீந்தி கடக்க வேண்டும் என்ற லட்சியத்தில் தலைமன்னார் பகுதியில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கினேன். 8 மணி நேரம் 25 நிமிடத்தில் நீந்தி வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

அடுத்த கட்டமாக ஸ்பெயின்-மொராக்கோ இடையேயான கடலை கடக்க திட்டமிட்டு உள்ளேன். தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலை நீந்தி கடக்க அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளுக்கும், ஆந்திர மாநில டி.ஜி.பி.க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த 10 பேரும், இலங்கையை சேர்ந்த 2 பேரும் நீந்தி கடந்து உள்ளனர். இதில் 13-வதாக நீந்திய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துளசிசைதன்யா 8 மணி நேரம் 25 நிமிடத்தில் நீந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இவரை தொடர்ந்து தமிழக ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே நாளை (செவ்வாய்க்கிழமை) நீந்த திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று(திங்கட்கிழமை) பகல் 2 மணிக்கு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்பிடி படகு மூலம் இலங்கை தலைமன்னார் பகுதிக்கு புறப்பட்டு செல்கிறார். இவர் ஏற்கனவே சர்வதேச கடல் எல்லைகடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதி வரை நீச்சல் அடித்து கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story