தொட்டிலை ஆட்டியபோது கட்டிலில் தலைமோதி 4 மாத குழந்தை பலி


தொட்டிலை ஆட்டியபோது கட்டிலில் தலைமோதி 4 மாத குழந்தை பலி
x
தினத்தந்தி 27 March 2018 10:37 AM GMT (Updated: 27 March 2018 10:37 AM GMT)

தொட்டிலை ஆட்டியபோது அருகிலிருந்த கட்டிலில் தலைமோதியதில் 4 மாத குழந்தை உயிரிழந்த சோகம் சென்னை மதுரவாயலில் நடைபெற்றுள்ளது.

சென்னை

மதுரவாயல், ஜெயலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரபு வயது 35. இவர் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி 30. இவர்களுக்கு லோகேஸ்வரி (4 வயது) என்ற மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி வீட்டில் குழந்தை பிரகதீஸ்வரனை சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்க வைத்து விட்டு பவானி வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, தொட்டிலில் படுத்திருந்த குழந்தை அழும் சத்தம் கேட்ட லோகேஸ்வரி தூங்கவைப்பதற்காக தொட்டிலை வேகமாக ஆட்டினார். அப்போது அருகில் இருந்த கட்டில் மீது குழந்தையின் தலை மோதியதாக தெரிகிறது. இதனால் குழந்தையின் தலையில் உள்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் தலை வீங்க ஆரம்பித்தது. குழந்தையோ வலி பொறுக்க முடியாமல் கதறி துடித்தது. இதனால் குழந்தையை உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை பிரகதீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கட்டிலில் தலை மோதியதால்தான் குழந்தை இறந்து போனது தெரியவந்துள்ளது.


Next Story