ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது
x
தினத்தந்தி 27 March 2018 11:36 AM GMT (Updated: 27 March 2018 11:36 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது மருத்துவக்குழு வாகனம் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Sterlite #SterliteProtest

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு கூடுதலாக 4 லட்சம் டன் தாமிர உற்பத்தி நடைபெறும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கு தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் பிப்ரவரி 20-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று அவர்களது போராட்டம் 44-வது நாளாக நீடிக்கிறது.

ஏற்கனவே கடந்த 24-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத் துக்குடியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் போராட்டக்குழுவை சேர்ந்த பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜா உள்ளிட்டோர் தலைமையில் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகநாதனும் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டெர்லைட் போன்ற ஆபத்து நிறைந்த ஆலைகள் இந்த பகுதியில் இருக்க கூடாது என்பதே அங்குள்ள மக்களின் எண்ணம். எனவே ஆலையை தடை செய்து விரிவாக்க பணியை நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதே போல் தே.மு.தி.க. வினர் ஏராளமானோர் திரண்டு வந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே ஆலையை மூட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதனிடையே அ.குமரெட்டியாபுரத்தில் இன்று 44-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். பொதுவாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு தான் போடுகிறார்கள். ஆனால் ஆலையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்திய மாணவர் சங்கம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளது. தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இன்று அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் போராட்டம் தீவிரமாகி உள்ளதால் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ. முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவ-மாணவிகளும்  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். காலையில் கல்லூரிக்கு வந்த அவர்கள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருந்த அட்டைகள் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.

Next Story