மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு


மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 27 March 2018 10:15 PM GMT (Updated: 27 March 2018 7:33 PM GMT)

சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனேஷ். இவரது மகன் ஹரீஸ். கடந்த 2011-ம் ஆண்டு விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.

சம்பவத்தன்று டியூசன் சென்ற அவன், சாலிகிராமம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பலத்த மழையால் அறுந்து கிடந்த மின்வயரில் மிதித்தான். இதில், அவன் மின்சாரம் தாக்கி இறந்து போனான்.

மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் தனது மகன் இறந்து விட்டதாகவும், தனக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்ரீனேஷ் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மின்வாரிய அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் மனுதாரரின் மகன் இறந்து போனார். எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 2011-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 7½ சதவீத வட்டி அடிப்படையில் இந்த தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் மின்வயர்களை முறையாக கண்காணித்து பராமரிக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். மின்வயர் அறுந்தால் தானாக மின்சாரம் தடைபட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்கான கருவியை பொறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story