தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு; 2வது நாளாக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு; 2வது நாளாக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 28 March 2018 3:19 AM GMT (Updated: 28 March 2018 3:19 AM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #SterliteProtest

தூத்துக்குடி,

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்து உள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்தது. கடந்த சனிக்கிழமை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து அதற்கு மறுநாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் திங்கட்கிழமை வ.உ. சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் ஆலையை மூட கோரி கோஷங்களையும் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து நேற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்கள் சங்கம் தர்ணா போராட்டம் நடத்தினர்.  அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே ஆலையை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  அவர்கள் வ.உ. சிதம்பரனார் கல்லூரி வாசலின் முன் தரையில் அமர்ந்து ஆலையை மூட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

Next Story