தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 28 March 2018 11:15 PM GMT (Updated: 28 March 2018 8:53 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சென்னை, 

சென்னையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த சோ.ராஜா மற்றும் பேராசிரியை பாத்திமா பாபு, சென்னை ஆதரவு குழுவை சேர்ந்த நித்தியானந்த் ஜெயராமன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் ஆலையை சுற்றியுள்ள 10 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் நிலம், நீர், காற்று ஆகியவை முற்றிலும் மாசு அடைந்து உள்ளது. இதனால் பலர் கொடிய நோய்களுக்கு உள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.

இளைய தலைமுறை முதல் அனைத்து தரப்பினரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘அதிசிவப்பு ஆலை’ என்று வகைப்படுத்தப்படும் தாமிர உருக்காலைகள் போன்ற மிகவும் அபாயகரமான ஆலைகள், ‘சிறப்பு தொழிற்சாலைகள் மற்றும் அபாயகரமான பயன்பாட்டுக்கான பகுதிகள்’ என்று வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமே அமைக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடியில் தெற்கு வீரபாண்டியபுரம் அபாயகரமான ஆலைகள் அமைப்பதற்கான பகுதி என்று ஒதுக்கப்படவில்லை. அபாயகரமான ஆலைகளை மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு சாட்சியாக 1984-ம் ஆண்டு நடந்த போபால் நச்சு வாயு கசிவு விபத்து இருக்கிறது.

தூத்துக்குடியில் தாமிர உற்பத்தி திறன் ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் டன்களாக அதிகரிக்கும். இதன்மூலம் உலகத்தின் 2-வது பெரிய தாமிர உற்பத்தி ஆலையாக அமையும். அதேநேரம் மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் அமைந்த உலகின் முதல் பெரிய தாமிர உற்பத்தி ஆலை என்ற கெட்ட பெயரும் தூத்துக்குடி ஆலைக்கு வந்து சேரும். இந்த ஆலையின் திட்ட வளாகம் அ.குமரெட்டியாபுரத்தில் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளது.

‘சட்டங்களை ஸ்டெர்லைட் மீறுவதற்கு அரசுகள் எப்படி உதவி செய்கின்றன’? என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பண பலத்தாலும், அரசியல் பலத்தாலும் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் லாபநோக்கை கொண்டே ஸ்டெர்லைட் செயல்படுகிறது. எனவே ஆலை அதிகாரிகள் மீது குற்ற வழக்கு தொடுக்க வேண்டும்.

ஆலை நிர்வாகத்திடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. நச்சு புகையால் கொடிய புற்றுநோய்க்கு பலர் ஆளாகி வருகின்றனர். இதுபோன்று இல்லாமல் நாங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும். இதற்காக ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்தித்து முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர், ஆலையில் இருந்து வெளியான நச்சுப்புகையால் பாதிக்கப்பட்ட அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த வெள்ளத்தாய் என்பவர் தன்னுடைய அனுபவத்தை எடுத்துக் கூறினார். 

Next Story