சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முன்ஜாமீன் கேட்டு மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முன்ஜாமீன் கேட்டு மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 28 March 2018 9:57 PM GMT (Updated: 28 March 2018 9:57 PM GMT)

முறைகேடு வழக்கில் சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் உள்பட 6 பேர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை, 

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான வணங்காமுடி, தனது பதவிக்காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கை வழங்கியதில் ஊழல் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரது வீடு உள்ளிட்ட 6 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.95 லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரது வீட்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ஜெயா டி.வி. நிர்வாக இயக்குனரான விவேக் உள்ளிட்ட 74 பேருக்கு முறைகேடாக சட்ட பட்டம் வழங்கியதாக தகவல் வெளியானது.

பணம் வசூல்

இதில், 4 மாணவர்கள் போலியான ஆவணங்களை கொடுத்து சட்டம் பயின்றதாகவும், இவர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் மகன்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இப்படி முறைகேடாக சட்ட பட்டம் பெற லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி, சட்ட பல்கலைக்கழக நிதி இயக்குனர் ஜெய்சங்கர், தொலைதூரக் கல்வி இயக்குநர் சர்வாணி, பதிவாளர் பாலாஜி, துணைப்பதிவாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாக அதிகாரி ராஜேஷ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்ஜாமீன்

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி வணங்காமுடி உள்பட 6 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

Next Story