போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானது தான் ஐகோர்ட்டில், நீதிபதி அறிக்கை தாக்கல்


போக்குவரத்து ஊழியர்களுக்கு  2.44 காரணி ஊதிய உயர்வு சரியானது தான் ஐகோர்ட்டில், நீதிபதி அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 28 March 2018 10:08 PM GMT (Updated: 28 March 2018 10:08 PM GMT)

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானது தான் என்று ஓய்வுபெற்ற நீதிபதி, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை, 

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வேலைக்கு சென்றவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி நியமனம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை சட்டவிரோதம் என்றும், அவர்கள் உடனே வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண ஓய்வு பெற்ற நீதிபதியான பத்மநாபனை மத்தியஸ்தராக ஐகோர்ட்டு நியமனம் செய்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.கோவிந்தராஜ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்தியஸ்தரான ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தன்னுடைய அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், ‘அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசு நிர்ணயம் செய்துள்ள 2.44 காரணி ஊதிய உயர்வு என்பது சரியானது தான். எனவே போக்குவரத்து ஊழியர்கள் கோரும் 2.57 காரணி ஊதிய உயர்வை வழங்குவதற்கான அவசியம் தற்போது எழவில்லை’ என்று கூறியுள்ளார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், போக்குவரத்துக்கழகங்கள், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வட்டி நிலுவைத்தொகை ரூ.394.69 கோடியை அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதிக்குள் கண்டிப்பாக வழங்க வேண்டும். அதற்குமேல் காலஅவகாசம் வழங்கப்படாது என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனிநபர் மத்தியஸ்தர் முன் நாம் எடுத்து வைத்த வாதங்கள் சம்பந்தமாக மத்தியஸ்தர் என்ன புரிதலை கொண்டுள்ளார்? என்பதையும், எந்த அடிப்படையில் ஊதிய உயர்வு நியாயமானது? ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று கூறியுள்ளார் என்பதையும் அவர் தாக்கல் செய்த முழு அறிக்கையையும் பெற்று முழுமையாக பரிசீலித்த பின்னரே தெரிய வரும்.

எனவே தனி நபர் மத்தியஸ்தர் நியமனம் பற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணை; ஊதிய ஒப்பந்தம் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட முறை; இப்போது அளிக்கப்பட்டுள்ள காரணி 2.44 சரி தான் என மத்தியஸ்தர் தாக்கல் செய்த அறிக்கை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளின் மீதும் மேல்முறையீடு செய்ய உள்ளோம்’ என்று தெரிவித்து உள்ளார். 

Next Story