விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, இளவரசி மகன் எச்சரிக்கை


விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, இளவரசி மகன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 March 2018 10:15 PM GMT (Updated: 29 March 2018 8:30 PM GMT)

என் மீது அவதூறு பரப்பினால் சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு, இளவரசி மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

என் மீது அவதூறு பரப்பினால் சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு, இளவரசி மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட பல்கலைக்கழகத்தில் இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் சரியான சான்றிதழ்களை அளிக்காமல் முறைகேடான வகையில் சேர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் விவேக் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு விவேக் ஜெயராமன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஜெயக்குமார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் உடன் பிறந்த சகோதரி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர் மூலமாக, வெளிநாடுவாழ் இந்தியர் என்ற பிரிவில், முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்து, அதன் பின்னரே அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியிருந்தால் அப்போதே தனக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கும்.

சட்டப்படிப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாலும், வேறு சில வேலைகளாலும் படிப்பைத் தொடர முடியாத நிலையில், சட்டப்படிப்பில் இருந்து விலகி விட்டேன்.

மூத்த அமைச்சரான ஜெயக்குமார், இது குறித்த ஆதாரங்களையோ, அடிப்படை உண்மைகளையோ கொஞ்சமும் விசாரிக்காமல் கடுமையான வார்த்தைகளால், நாகரிகமற்ற முறையில் விமர்சித்திருக்கிறார். கைது செய்யப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

என்மீது தவறு இருந்தால், அமைச்சர் ஜெயக்குமார், என்னை தாராளமாக கைது செய்யட்டும். எத்தகைய நடவடிக்கையையும் சட்டப் பூர்வமாக சந்திக்க, தான் தயாராக இருக்கிறேன். ஆட்சியும், இது போன்ற மிரட்டல்களுக்கு ஒரு போதும் பயப்படுகிற நபர், நான் அல்ல. எத்தகைய மிரட்டல்களையும் சட்டப்பூர்வமாக சந்திக்க, தான் தயார்.

பெயருக்குப் பின்னால் போதுமான பட்டங்களைப் போட்டுக் கொள்கிற அளவுக்கு, நன்கு படித்த நான், தனிப்பட்ட ஆர்வத்தினாலேயே சட்டப் படிப்பில் சேர்ந்தேன். வெறும் சான்றிதழுக்காக அல்ல.

இது குறித்த எந்த உண்மையையும் அறியாமல், தான் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் தேவையில்லாமல் என்னையும், என் குடும்பத்தையும் அவமானப்படுத்துவது போல் ஜெயக்குமார் பேசியிருக்கிறார். இதன்மூலம், அவரது இத்தனை ஆண்டுகால அரசியல் அனுபவத்திற்கு அவரே இழுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

என் பெயரைச் சொல்லி, என் குடும்பம் அவதூறுக்கு ஆளாகும் நிலையை இனி எவர் ஏற்படுத்தினாலும், அதற்கான சட்ட விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறேன்.

இவ்வாறு விவேக் ஜெயராமன் கூறியுள்ளார்.

Next Story