சசிகலாவுக்கு 35 வருடமாக நிம்மதியே இல்லை. இப்போதும் தொடர்கிறது - சகோதரர் திவாகரன் பேச்சு


சசிகலாவுக்கு 35 வருடமாக நிம்மதியே இல்லை. இப்போதும் தொடர்கிறது - சகோதரர் திவாகரன் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2018 9:07 AM GMT (Updated: 30 March 2018 9:07 AM GMT)

35 வருடமாக அவருக்கு நிம்மதியே இல்லை. இப்போதும் தொடர்ந்து வருகிறது என மறைந்த ம. நடராஜன் நினைவேந்தல் -படத்திறப்பு நிகழ்ச்சியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசினார்.

தஞ்சாவூர், 

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் கடந்த 20-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். ம.நடராஜனின்  நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி  இன்று  காலை தஞ்சையில் நடைபெற்றது.   

விழாவிற்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடக்க உரை ஆற்றினார். 

இந்திய பொதுவுடமைக் கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு ம.நடராஜனின் உருவப் படத்தை திறந்து வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,  ம.நடராஜன் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை வெளியிட அதை மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் வி.திவாகரன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ம.நடராஜனின் உருவ படத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் திவாகரன் பேசும் போது கூறியதாவது:-

நாங்கள் நடராஜன் அருகிலேயே இருந்ததால் அவருடைய அருமை எங்களுக்கு தெரியவில்லை. இப்போது அதை உணர்ந்து கொள்கிறோம். எனது சகோதரி சசிகலா திருமணமாகி வரும்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

எனது தந்தைக்கு நான் எவ்வளவு பயந்தேனோ அதுபோன்று தான் அத்தான் நடராஜனுக்கும் பயந்தேன். அவர் எனக்கென்று தனி இடம் வைத்திருந்தார். அதை இன்று வரை நான் கடைபிடித்தேன். அவர் ஒரு மறைக்கப்பட்ட வரலாறு. 

அவர் இறந்த பிறகு முள்ளி வாய்க்கால் முற்றத்தின் உள்ளே அவரது உடலை அடக்கம் செய்யலாம் என்று முடிவு எடுத்தோம். ஆனால் அது ஒரு டிரஸ்டு. அதற்கு பழ.நெடுமாறன் தலைவராக இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று அனுமதியெல்லாம் கேட்க வேண்டும். எனவே நாங்கள் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அவரது உடலை அடக்கம் செய்தோம். இன்று அவரது சமாதியில் 50 பேர் மொட்டை போட்டு கொண்டனர். இதை பார்த்த பின்பு தான் தெரிகிறது. அவர் அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார் என்பது.  நானும் திராவிட கழகத்தை சேர்ந்தவன் தான். எனது சகோதரி சசிகலா துன்பத்திற்கு மேல் துன்பம் அடைந்து வருகிறார். 35 வருடமாக அவருக்கு நிம்மதியே இல்லை. இப்போதும் அதுதான் தொடர்ந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story