மனைவி போலீசில் புகார் செய்தார் என்பதற்காக கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு


மனைவி போலீசில் புகார் செய்தார் என்பதற்காக கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 March 2018 10:00 PM GMT (Updated: 30 March 2018 8:23 PM GMT)

மனைவி போலீசில் புகார் கொடுத்தார் என்பதற்காக கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது

சென்னை,

குடும்பநல கோர்ட்டில் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர், மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதால் விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், அவரது மனைவி தன்னை கணவருடன் சேர்த்துவைக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த கோர்ட்டு, கணவரின் மனுவை தள்ளுபடி செய்தும், மனைவியின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த வாலிபர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவரது தரப்பில் ஆஜரான வக்கீல், மனைவி ஆணவமாக நடந்துகொண்டு கொடுமைப்படுத்துவதாகவும், தேவையில்லாமல் போலீசில் புகார் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த அவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் வாதாடினார்.

மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல், ‘அந்த வாலிபருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது. அதை குணப்படுத்த ஓமியோபதி மருத்துவர் என்ற முறையில் மனைவி அவருக்கு மருந்து கொடுத்துவந்தார். இது கணவரின் பெற்றோருக்கு தெரியவந்ததும் மருந்து சாப்பிடுவதை அவர் நிறுத்திவிட்டார். குழந்தை இல்லை என்று அந்த பெண்ணை கணவரின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதுபோன்ற சூழ்நிலையில் வீட்டில் உள்ள தனது பொருட்களை எடுத்துச்செல்வதற்காக மட்டுமே மருத்துவரான அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்’ என்றார்.

மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனைவி போலீசில் புகார் கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்த அவரது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார் என்பதற்காக கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது. கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பது தெரிந்தபோதிலும் ஓமியோபதி மருத்துவரான தன்னால் அதை சரிசெய்ய முடியும் என்று மனைவி நம்புகிறார். அவர் இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்துசெல்ல விரும்பவில்லை. குடும்பநல கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சரியானது தான். வாலிபரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story