சென்னை விமான நிலையத்தில் பணிப்பெண்களை நிர்வாணமாக்கி சோதனை சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் பணிப்பெண்களை நிர்வாணமாக்கி சோதனை சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 March 2018 10:30 PM GMT (Updated: 31 March 2018 7:05 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவன பணிப்பெண்களை நிர்வாணமாக்கி சோதனை நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர், 

சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவன பணிப்பெண்களை நிர்வாணமாக்கி சோதனை நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அந்த விமான நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது.

சென்னை விமான நிலை யத்தில் இருந்து டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் தனியார் விமானங்களில், பயணிகளுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில் இதுபோல் விமான நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் உணவு பொருட்களோடு, அந்த விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் வெளியில் இருந்து தாங்கள் வாங்கி வரும் பொருட்களை பயணிகளுக்கு விற்பதாகவும், சில நிறு வனங்களுக்கு ஆதரவாக பொருட்களை கடத்த உதவுவதாகவும் அந்த நிறுவன அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த 28 மற்றும் 29-ந்தேதிகளில் சென்னையில் இருந்து டெல்லி சென்று, அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய ‘ஸ்பைஸ்ஜெட்’ நிறுவன விமானங்களில் இருந்த பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களை அந்த நிறுவன பாதுகாவலர்கள் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் புகார் கூறும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், “நாங்கள் விமானத்தில் இருந்து பணி முடிந்ததும் கழிவறைக்கு செல்ல அனுமதி இல்லை. நேரடியாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். அங்கு எங்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி கூனி குறுகி நிற்க செய்கின்றனர். சோதனை என்ற பெயரில் தொடக்கூடாத இடங்களில் தொடுகிறார்கள். 10 ஆண்டுகளாக பணிபுரியும் பெண்களையும் கூட நம்பாமல், அவர்கள் அணியும் நாப்கின்களையும் கழற்றி சோதனை நடத்தினார்கள்” என்று கூறியுள்ளனர்.

இதற்கு ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன அதிகாரிகள், தற்போது விளக்கம் அளித்து உள்ளனர். இந்த சோதனை குறித்து அவர்கள் கூறியதாவது:-

விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்கள், விமான நிறுவன உணவு பொருட்கள் விற்பனையில் மோசடியில் ஈடுபடுவதாகவும், அவர்கள் கடத்தல் சம்பவத்துக்கு உதவி புரிவதாகவும் எங்களுக்கு புகார்கள் வந்தன. அதன்படியே இந்த சோதனை நடத்தப்பட்டது.

பயணிகள் எவ்வாறு விமான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்களோ?, அதேபோல்தான் பணிப்பெண்களையும் சோதனைக்கு உட் படுத்தினோம். இது இயல்பான சோதனைதான். சர்வதேச விமான ஆணைய விதி முறைகளுக்கு உட்பட்டுதான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் விதி முறைகள் மீறப்படவில்லை. சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இதுபோன்ற சோதனை நடத்தப்படுகிறது.

தனி அறையில் கதவுகள் தாழிடப்பட்ட நிலையில்தான் சோதனை நடத்தப்பட்டது. ஆண் ஊழியர்களை, ஆண் பாதுகாவலர்களும், பெண் பணியாளர்களை பெண் பாதுகாவலர்களும் சோதனை செய்கிறார்கள்.

இந்த சோதனையின்போது முறைகேட்டில் ஈடுபட்ட பணியாளர்கள் பற்றி தெரிய வந்து உள்ளது. அவர்கள் மீதும், ஊழியர்களை சோதனை செய்தபோது விதிமுறைகளை மீறி செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story