தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சரத்குமார் பங்கேற்பு


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் சரத்குமார் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 March 2018 10:00 PM GMT (Updated: 31 March 2018 7:43 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சரத்குமார் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் 48-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அவர் அ.குமரெட்டியபுரம் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அந்த மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிபம்புகளில் பிடித்த மாசு கலந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் பிடித்து வந்து சரத்குமாரிடம் காண்பித்து முறையிட்டனர்.

பின்னர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசத் தொடங்கினார். அப்போது திடீரென்று அவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தார். இதனால் மக்கள், அந்த தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று உணர்ச்சிவசப்பட்டனர். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

25 ஆண்டுகளாக இந்த பகுதி மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். நீங்கள் பல சோதனைகளை சந்தித்து உள்ளர்கள். 1996 முதல் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனாலும் ஆலை தொடர்ந்து செயல்பட மாசுகட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் அனுமதி அளித்து உள்ளது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்த ஆலையை மூடும் வரை நான் உங்களோடு இருப்பேன்.

பலர் சேர்ந்து போராடும் போது இலக்கை எளிதாக எட்ட முடியும். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு இதனை சரி செய்து இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். மக்களை பற்றி சிந்திக்கும் அரசு நிலையான ஆட்சியை தர முடியும். உங்கள் போராட்டம் தொடர வேண்டும். ஒவ்வொரு தமிழனுக்காகவும் போராட வேண்டும். யார் வந்தாலும் வரவேற்கலாம்.

அதே நேரத்தில் உங்கள் ஒற்றுமையை குலைக்க வருவார்கள். அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். அமைதி காத்து வெற்றி பெற வேண்டும். மாநில அரசு உடனடியாக இந்த ஆலையை மூட வேண்டும். இந்த பிரச்சினை தமிழ்நாடு மக்கள் பிரச்சினையாக அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து போராட்டக்களத்தில் இருந்த சிறுவன் அருண் என்பவர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினான். இதனால் சரத்குமார் அந்த சிறுவனை தூக்கி முத்தமிட்டார்.

போராட்டத்தில் துணை பொதுச் செயலாளர் என்.சுந்தர், மாவட்ட செயலாளர்கள் வில்சன் (வடக்கு), தயாளன்(தெற்கு), மாநகர செயலாளர் பிரபாகரன், மாணவர் அணி செயலாளர் குரூஸ்திவாகர் மற்றும் போராட்டக்குழுவினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக விமான நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசு அடைந்துள்ளது. பலர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆலையை மூடுவது நல்லது. பல மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இங்கு மட்டும் எப்படி தமிழக அரசு அனுமதி வழங்கியது என்பது தெரியவில்லை. விதிமுறைகளை மீறி ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஆலையை அரசு உடனடியாக மூட வேண்டும்’ என்றார்.

Next Story