சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவில் போலீஸ் குவிப்பு


சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவில் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 1 April 2018 10:36 AM GMT (Updated: 1 April 2018 10:36 AM GMT)

சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. #Marina

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதையடுத்து மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்றவை நடத்த போலீசார் தடை விதித்தனர்.

அதன் பிறகு அங்கு தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை நடந்த முயன்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மெரினாவில் போராட்டம் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியான போது, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தை கண்டித்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்த மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு திரண்டனர். போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாதகைகளுடன் சிலர் மெரினா கடற்கரை மணல்பரப்பில் நின்று போராட்டம் நடத்துவது போது நேற்று மதியம் சமூக வலைத்தளங்களில் படங்கள் வெளியானது. தொலைக்காட்சிகளிலும் அந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

முதலில் போராட்டம் எங்கு நடக்கிறது? என்று தெரியாமல் போலீசார் விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரை மணற்பரப்பில் சுற்றி வந்தனர். பின்னர் உழைப்பாளர் சிலை பின்புறம் அமைந்துள்ள மணற்பரப்பில் போராட்டம் நடைபெற்றதை அறிந்து போலீசார் அங்கு சென்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 5 பெண்கள் உள்பட 18 பேர் கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சொந்த ஜாமீனில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில்,  சென்னை மெரீனா கடற்கரையில் இன்று போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சர்வீஸ் சாலை மூடப்பட்டது.  அங்கு வாகன போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.  பொதுமக்கள் வழக்கம் போல் மெரீனா கடற்கரைக்கு வந்து செல்லலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெறுவதை தடுக்க 300க்கும் மேற்பட்ட போலீசார் மெரீனா கடற்கரையில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.  போராட்டம் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக முனெச்சரிக்கை நடவடிக்கையாக  சென்னை மெரினாவில் மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 6 துணை ஆணையர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேறு எங்காவது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறதா? என்பது குறித்து குதிரைப்படை போலீசாரும், கடற்கரை ரோந்து போலீசாரும் கடற்கரை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாறுவேடத்திலும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதனால் மெரினா கடற்கரை இன்று மாலை பரபரப்புடன் காணப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என் பதால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே மக்கள் கூட்டத்தோடு ஆர்ப்பாட்டக்காரர் கள் யாரும் புகுந்து விடக் கூடாது என்பதால், போலீ சார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story