அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் 5-ந் தேதி பொது வேலைநிறுத்தம்


அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் 5-ந் தேதி பொது வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 2 April 2018 11:00 PM GMT (Updated: 2 April 2018 8:04 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாட்டில் 5-ந் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாட்டில் 5-ந் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டம், சென்னையில் உள்ள தொ.மு.ச. பேரவை தலைமை அலுவலகமான கலைஞரகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச. பேரவைத் தலைவர் வே.சுப்புராமன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், கி.நடராசன், சி.பாலசுப்பிரமணியன், ஆ.சீ. அருணகிரி (எல்.பி.எப்.), ஜி. சுகுமாறன், கே.திருச்செல்வன் (சி.ஐ.டி.யு.), சேவியர் (ஐ.என்.டி.யு.சி.), டி.எம்.மூர்த்தி, எம்.ராதாகிருஷ்ணன் (ஏ.ஐ.டி.யு.சி.), ராஜாஸ்ரீதர், மு.சுப்பிரமணியம் (எச்.எம்.எஸ்.), ஏ.எஸ்.குமார் (ஏ.ஐ.சி.சி.டி.யு.), வி.சிவகுமார், எஸ்.சாய்குமார் (ஏ.ஐ.யு.டி.யு.சி.) உள்ளிட்ட பல தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5-ந் தேதியன்று தமிழ்நாட்டின் அனைத்து பொதுத்துறை, தனியார் துறை தொழிற்சாலைகள், மத்திய - மாநில அரசுத் துறை, அலுவலகங்கள், கட்டிடம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஒருநாள் பொது வேலைநிறுத்தம் செய்வதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.

அன்று மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் மறியல் போராட்டத்தை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. சென்னையில் அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்படுகிறது. பிரதமர் உள்ளிட்ட மத்திய மந்திரிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட இயக்கங்களில் பங்கெடுப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

* ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற போராடும் மக்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவைத் தெரிவிப்பதோடு, தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் அவற்றில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றன. இதேபோல், கதிராமங்கலம், நெடுவாசல், நியூட்ரினோ போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தொழில்களைத் தொடங்க எதிர்த்து நடக்கும் இயக்கங்களுக்கு இக்கூட்டம் ஆதரவு தெரிவிக்கிறது.

* சேலத்தில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத் தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பித்ததற்காக, 21 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளதை இக்கூட்டம் கண்டிக்கிறது. தொழிலாளர் இணை ஆணையரின் அறிவுரையை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story