முதுகலை மருத்துவ படிப்பில் ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது


முதுகலை மருத்துவ படிப்பில் ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது
x
தினத்தந்தி 3 April 2018 11:00 PM GMT (Updated: 3 April 2018 10:03 PM GMT)

மகப்பேறு விடுப்பு எடுக்கும் அரசு பெண் டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்திய நாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் அருணா உள்பட 6 அரசு டாக்டர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கடந்த மார்ச் 15-ந் தேதி வெளியிட்ட முதுகலை மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில், ‘முதுகலை மருத்துவ படிப்பில் சேரும் அரசு டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளில் தொடர்ச்சியாக பணிக்கு வந்திருக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள், குறிப்பாக பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்திருக்கக்கூடாது. அவ்வாறு எடுத்திருந்தால் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படாது’ என்று கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது. மகப்பேறு விடுப்பு என்பது பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமை. இதை மீறும் விதமாக தமிழக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ரிச்சர்ட்சன் வில்சன், வி.சுப்பிரமணியன், ஆரோக்கியதாஸ் உள்பட பலர் ஆஜராகி, ‘ஏற்கனவே நீதிபதி என்.கிருபாகரன், மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து பணியில் இருந்ததாக கருதி அவர்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்’ என்று வாதிட்டார்கள்.

இதையடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அடிப்படை உரிமை உள்ளது. அவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு விடுப்பு எடுக்கும்போது அதை விடுப்பு காலமாக கழிக்காமல் அவர்கள் தொடர்ந்து பணி செய்ததாகவே கருதவேண்டும். ஆனால், தொலைதூரம், கடினமான மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்கள் இவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டால் 2 சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாக மாறிவிடாதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், ‘தனி நீதிபதி உத்தரவில் இருந்து மாறுபடுவதால், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரணைக்காக பரிந்துரை செய்கிறேன். இதுதொடர்பான விரிவான உத்தரவை இரு தினங்களுக்குள் பிறப்பித்துவிடுவேன் என்பதால், அதுவரை முதுகலை மருத்துவ படிப்புக்கான தேர்ச்சி பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனர் வெளியிடக்கூடாது’ என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story