போராட்டக்களத்தின் மத்தியில் இளம் ஜோடியின் திருமணம்


போராட்டக்களத்தின் மத்தியில் இளம் ஜோடியின் திருமணம்
x
தினத்தந்தி 5 April 2018 11:15 PM GMT (Updated: 5 April 2018 10:52 PM GMT)

போராட்டக்களத்தின் மத்தியில் இளம் ஜோடியின் திருமணத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சென்னையில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் அயனப்பாளையத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் பாரதி தாசன்-ஸ்ரீமதி ஆகியோர் திருமண கோலத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வந்தனர்.

அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளே அழைத்து வந்தார். அந்த இளம் ஜோடியினர் தங்கள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாலை மாற்றி, திருமணம் செய்துகொண்டனர்.

மணமக்களை மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அதனை தொடர்ந்து மணமக்கள், மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.

மணமக்களுக்கு மு.க.ஸ்டாலின் அங்கே பணப்பரிசு வழங்கினார். அங்கிருந்த மற்ற தலைவர்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டரின் திருமணத்தை கட்சி அலுவலகத்தில் வைத்து நடத்தி வைப்பதாக திருமாவளவன் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர் போராட்டங்களில் கலந்து கொண்டதால், போராட்டக்களத்தின் மத்தியில் அந்த இளம் ஜோடியின் திருமணம் நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story