9-ந்தேதி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் சரத்குமார் அறிவிப்பு


9-ந்தேதி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் சரத்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 10:59 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தமிழகம் முழுவதும் 9-ந்தேதி (திங்கட்கிழமை) சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு, குறிப்பாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்சினை, நியூட்ரினோ, ஸ்டெர்லைட் என அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வுகாண வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், மத்திய அரசை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதேபோல், கோவையில் முதன்மை துணை பொது செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், திருநெல்வேலியில் முதன்மை துணை பொதுச்செயலாளர் எஸ்.வி.கணேசன், கன்னியாகுமரியில் கொள்கைபரப்புச் செயலாளர் என்.எம்.எஸ்.விவேகானந்தன், மதுரையில் மாநில துணை பொதுச் செயலாளர் ஜி.ஈஸ்வரன், கடலூரில் மாநில இளைஞரணி செயலாளர் ஏ.பிரான்சிஸ் அந்தோணிராஜ், காஞ்சீபுரத்தில் மாநில வர்த்தகரணி செயலாளர் கே.ஜே.நாதன், திருவள்ளூரில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் டி.மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும், திருச்சியில் மாநில மாணவரணி செயலாளர் அக்வின் நோயல், ராமநாதபுரத்தில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.நட்சத்திரவெற்றி, கிருஷ்ணகிரியில் வர்த்தகரணி துணை செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், தேனியில் மாநில வழக்கறிஞரணி துணைச்செயலாளர் எஸ்.செல்வம், பெரம்பலூரில் மாநில வழக்கறிஞரணி துணைச்செயலாளர் பூவை செல்வம், நாகப்பட்டினத்தில் மாநில வர்த்தகரணி துணைச் செயலாளர் ஜே.பாபு, ஈரோட்டில் மாநில இளைஞரணி துணை செயலாளர் எம்.ஜெயராஜ், தஞ்சாவூரில் மாநில வழக்கறிஞரணி செயலாளர் பி.குமார், விழுப்புரத்தில் புதுவை மாநிலச் செயலாளர் இ.கே.ராமச்சந்திரன், திருவண்ணாமலையில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் பி.கிரிபாபு, கரூரில் மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கம் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் ஒருங்கிணைந்து மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்களின் ஆர்ப்பாட்டத்தினை மிக சிறப்பாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்திட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story