ரஷிய சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை


ரஷிய சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 5 April 2018 11:15 PM GMT (Updated: 5 April 2018 11:12 PM GMT)

ரஷியா நாட்டு சிறுவனுக்கு சென்னையில் வெற்றிகரமாக இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதையொட்டி அவருடைய தாய் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சென்னை,

ரஷியா நாட்டைச் சேர்ந்த 8 வயதான ரோமன் புய்யாக்கின் என்ற சிறுவனுக்கு தொடர்ந்து 3 முறை இருதய செயலிழப்பு ஏற்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக இருதயம் தனது துடிப்பை நிறுத்தியபோதும், எக்மோ சிகிச்சை மூலமாக சிறுவனுக்கு இருதய துடிப்பை மீட்டு இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்கு வெற்றிகரமாக மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

இவ்வரிய சிகிச்சை சென்னை போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், டாக்டர் சுரேஷ்ராவ், டாக்டர் நாகேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக இருதயம் தனது துடிப்பை நிறுத்திய தருவாயில் இருதய செயல்பாட்டினை மீட்டு சிறுவனுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட நிகழ்வு இதுவரை உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் உடலுறுப்பு தானம் சார்ந்த நடைமுறைக்கும், இவ்வகை சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட ரஷியா நாட்டு சிறுவன் ரோமன் புய்யாக்கின் மற்றும் அவரது தாயார் புய்யாக்கின் ஏகடெரினா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், போர்டிஸ் மலர் மருத்துவமனையின் முதன்மை இருதயவியல் மற்றும் இருதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், இருதய அவசர சிகிச்சை மற்றும் இருதய மயக்கவியல் பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்ராவ் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story