துணைவேந்தர் பதவிக்குமா தமிழருக்கு தகுதியில்லை - கவிஞர் வைரமுத்து


துணைவேந்தர் பதவிக்குமா  தமிழருக்கு தகுதியில்லை - கவிஞர் வைரமுத்து
x
தினத்தந்தி 6 April 2018 9:56 AM GMT (Updated: 6 April 2018 9:56 AM GMT)

பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு வாய்ப்பில்லை, துணைவேந்தர் பதவிக்குமா தமிழருக்கு தகுதியில்லை என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். #Vairamuthu #ViceChancellor

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2 வருடங்களாக காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக துணைவேந்தர் தேடுதல் குழு நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் அமைக்கப்பட்டது. துணைவேந்தராக நியமிக்கக்கோரி விண்ணப்பித்த 170 பேரில் 8 பேரை தேர்ந்தெடுத்து தேடுதல் குழு நேர்முகத்தேர்வு நடத்தியது.

அந்த 8 பேரில் பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் எச்.தேவராஜன், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன மெட்டீரியல் எனர்ஜி துறை கவுரவ பேராசிரியர் எம்.கே.சூரப்பா, சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.பொன்னுசாமி ஆகிய 3 பேர் பெயரை பட்டியலிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் தேடுதல் குழு ஒப்படைத்தது. அந்த 3 பேரிடமும் நேற்று கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேர்காணல் நடத்தினார்.

இந்தநிலையில் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தவிவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து வைரமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை?  மத்திய அரசின்  இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா?  தனிப்படுத்தவா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story