பல்வேறு இடங்களில் போராட்டம்; 200 பேர் கைது


பல்வேறு இடங்களில் போராட்டம்; 200 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 11:15 PM GMT (Updated: 6 April 2018 10:35 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தபால் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே தடுப்புகளை வைத்து தடுத்தனர். ஆனால் தடுப்புகளை மீறி தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை மண்டல செயலாளர் செ.ராஜேந்திரபிரசாத் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்த முயற்சித்தனர்.

அவர்களை போலீசார் ஹாடவ்ஸ் சாலை அருகே தடுப்புவேலி அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் அமைத்த தடுப்பு வேலியையும் தாண்டி சாஸ்திரிபவனை பூட்டு போட முயற்சித்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சென்னை அண்ணாநகர் அண்ணா வளைவு அருகில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் விருகை வி.என்.கண்ணன் தலைமையில் பலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சென்னை மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட மயிலாப்பூர் பகுதி மக்களை போலீசார் கைது செய்தனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரசு கவின் கலை கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைமறியல், போராட்டம் நடத்தியதாக மொத்தம் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story