55-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் ஆதரவு அளிக்க படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்


55-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் ஆதரவு அளிக்க படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்
x
தினத்தந்தி 7 April 2018 7:40 AM GMT (Updated: 7 April 2018 7:40 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். #Sterliteissue #Sterliteprotest

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை உள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும்,  கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.குமரெட்டியாபுரத்தில் பொதுமக்களின் போராட்டம் இன்று 55வது நாளாக நீடிக்கிறது.

இதே போல ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி, வடக்கு சங்கரப்பேரி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம் ஆகிய கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தங்கள் கிராமங்களில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கல்லூரி மாணவ-மாணவிகள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள ஹோலிகிராஸ் கல்லூரி மற்றும் புனித மரியன்னை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டார்கள். இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களை தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 
இதே போல தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரசார் அ.குமரெட்டியாபுரம் மக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள். தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர். 

அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கம் சார்பில் மீனாட்சி மிஷன் நடமாடும் மருத்துவமனை மூலம் குமரெட்டியாபுரத்தில் மக்களுக்கான மருத்துவமுகாம் நடைபெறுகிறது  

புதிய தமிழகம் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி இன்று தூத்துக்குடி வந்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை அவர் சந்தித்து பேசினார். 

இன்று மதியம் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அ.குமரெட்டியாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்கிறார். இதே போல நாளை காலை 11 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் அ.குமரெட்டியாபுரம் வருகிறார்கள். அங்கு பொதுமக்களை சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 

Next Story