சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு


சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?  போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 19 April 2018 10:15 PM GMT (Updated: 19 April 2018 7:05 PM GMT)

சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

ஹெல்மெட் அணியாமல் சென்ற வாலிபரை பொது இடத்தில் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாலிபரை தாக்கிய போலீசார்

சென்னை தியாகராயநகர் பகுதியில் கடந்த 2-ந்தேதி ஹெல்மெட் அணியாமல் தாயார் சங்கீதா, சகோதரி ரேவதி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பிரகாஷ் என்பவரை மாம்பலம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தாக்கினர்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ஜெயராமன் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி டி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் ஆஜராகினர்.

என்ன நடவடிக்கை?

பிரகாஷ் சம்பவத்தன்று நடந்ததை புகார் மனுவாக நீதிபதியிடம் அளித்தார். சம்பவத்தன்று அங்கு இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் இந்துமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர் பிரபு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரகாஷ் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பிரபு, இந்துமதி, சுயம்புலிங்கம் ஆகியோர் அடுத்த மாதம் 15-ந்தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பிரகாசை தாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Next Story