சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 April 2018 3:09 AM IST (Updated: 20 April 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் வலை வழக்கின் குற்றவாளிகளைக் காப்பாற்ற சதிசெய்வது கண்டிக்கத்தக்கது.

நிர்மலாதேவி பாலியல் வலை வீசியதன் பின்னணியில் பெரிய மனிதர்கள் உள்ளனர் என்பதைத்தான் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தமக்கே என்று கூறிக்கொள்ளும் கவர்னர், இந்த விஷயத்தில் தலையிட்டு கேவலமான செயல்களில் ஈடுபட்ட காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அவரது அதிகாரத்திற்கு ஒரு மரியாதை இருந்திருக்கும். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை தமக்கு அருகில் அமர்த்திக்கொண்டு கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தது தான் ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தீர்க்கப்பட வேண்டும்.

அதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை எந்த வகையிலும் உதவாது. மத்தியப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மூலமாகவே பாலியல் வலை அத்தியாயத்தின் பின்னணியில் உள்ள அத்தனை பெரிய மனிதர்களையும் அம்பலப்படுத்த முடியும். தமிழகத்தில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அச்சமின்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க இதுமிகவும் அவசியமாகும். எனவே, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story