பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி கருத்து: எஸ்.வி.சேகர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ


பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி கருத்து: எஸ்.வி.சேகர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 22 April 2018 6:29 PM GMT (Updated: 22 April 2018 6:29 PM GMT)

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செட்டிகுறிச்சியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 2011–ம் ஆண்டு முதல்– அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்றபோது தமிழகம் மின்வெட்டில் சிக்கி தவித்தது. அதன்பிறகு அவரது நிர்வாக திறமையால் மூன்றே ஆண்டுகளில் தமிழகம் மிகை மின்மாநிலமாக மாறியது. காற்றாலை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பெண் நிருபர்களையும், பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பெண்களை இழிவாக பேசுகிறவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்தி, தண்டனை பெற்று தருவோம். இனிமேல் யாரும் பெண்களை அவதூறாக பேசக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவோம். உடன்குடியில் வைகோ மீதான கல்வீச்சு தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

பா.ஜ.க.வினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடியை பற்றி தெரிவித்த கருத்துக்குதான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியுள்ளனர். ஜனநாயக நாட்டில் யாரையும் விமர்சித்து பேச உரிமை உண்டு. ஆனால் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் நாங்கள் ஓய மாட்டோம் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


Next Story