வைகோ நடத்தும் பிரசார பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்


வைகோ நடத்தும் பிரசார பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 April 2018 7:46 PM GMT (Updated: 22 April 2018 7:46 PM GMT)

உடன்குடியில் மோதல் சம்பவம் ஏற்பட்டதையடுத்து வைகோ நடத்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். #TamilssaiSoundararajan

சென்னை, 

உடன்குடியில் மோதல் சம்பவம் ஏற்பட்டதையடுத்து வைகோ நடத்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

உடன்குடியில் மோதல்

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசார யாத்திரை என்ற பெயரில் வழக்கம் போல் மோடி எதிர்ப்பு பிரசாரம் நடத்தி வரும் வைகோ, மோடியை நாக்கில் நரம்பில்லாமல் இழிவான சொற்களால் தரம் தாழ்ந்து விமர்சித்து வருவதை கேட்டு பொங்கி எழுந்த பா.ஜ.க.வினர் உடன்குடியில் அவர் வரும் வழியில் கூடி நின்று அறவழியில் கருப்பு கொடியும், கருப்பு பலூன்களும் ஏந்தி நின்றனர்.

அப்போது அங்கு வந்த வைகோ, அங்கே மோடியை இழித்து பேசியதோடு வன்முறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்து இருக்கிறார். அவருடன் காரிலிருந்து கொண்டு வந்த இரும்பு கம்பிகளால் பா.ஜ.க.வினரை காயம் ஏற்படும் வகையில் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.

வன்முறை யாத்திரை

பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்து ஒரு மண்டபத்தில் வைத்திருந்த பொது அங்கு வந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி இருக்கிறார்.

வைகோவின் உடன் செல்லும் வன்முறை கும்பல் வாகனத்தில் கத்தி, கம்பு, கற்கள் என்ற ஆயுதங்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள் அவருடைய பிரசார யாத்திரை வன்முறை யாத்திரை ஆவதால் அதை தமிழக அரசு உடனே தடை செய்ய வேண்டும்.

நடவடிக்கை

எங்கள் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாக்கிய வைகோ கட்சினரையும் அதன் பின் நிகழ்வாக உடன்குடியில் மீண்டும் வன்முறையை தூண்டி வரும் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story