ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது


ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கைது
x
தினத்தந்தி 22 April 2018 10:00 PM GMT (Updated: 22 April 2018 8:13 PM GMT)

ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த சென்னை ஐகோர்ட்டு வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி தன்னுடைய 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் உறவினர்களுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். அங்கு திருமண விழா முடிந்த பிறகு, அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு புறப்பட்டனர். அதற்காக திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர்கள் ஏறினார்கள். மொத்தம் 10 பேர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.

அந்த ரெயில் திருப்பூரை கடந்து ஈரோடு நோக்கி நள்ளிரவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர், அந்த தம்பதியின் 9 வயது மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி கூச்சலிட்டாள். அவளுடைய சத்தத்தை கேட்டு அருகில் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் பெற்றோரும், சக பயணிகளும் திடுக்கிட்டு எழுந்தனர்.

அப்போது அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதனால் அவர்கள் சக பயணிகள் உதவியுடன் அந்த நபரை பிடித்துவைத்தனர். இதற்கிடையே அந்த ரெயில் ஈரோட்டிற்கு வந்தது. உடனடியாக அந்த நபரை ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பிரேம்ஆனந்த் (வயது 57) என்பதும், அவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரேம்ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.

Next Story