‘சிறையில் இருந்து சசிகலாவை மீட்கப்போவதாக திவாகரன் சொல்வது பொய்’ -முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல்


‘சிறையில் இருந்து சசிகலாவை மீட்கப்போவதாக திவாகரன் சொல்வது பொய்’ -முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல்
x
தினத்தந்தி 24 April 2018 4:45 AM IST (Updated: 24 April 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் இருந்து சசிகலாவை மீட்கப்போவதாக திவாகரன் சொல்வது பொய் என்று முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் குடும்பத்திற்கும், அவரது சகோதரர் திவாகரன் குடும்பத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது, “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கருத்து தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜெய்ஆனந்த் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “என்னால் முடிந்த நல்லதை போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்யப்போகிறேன். அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு” என்று கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்தும், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் ஒரு கருத்தை ஜெய் ஆனந்த் பதிவிட்டார். அதில், “நான் அ.ம.மு.க. என்று எங்கும் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்?. எப்போது பிரச்சினை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதனை கண்டறியும் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், தனது முகநூல் பக்கத்தில் நேற்று கருத்து ஒன்றை அறிக்கையாக பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கட்சியின் ஆணிவேராக சசிகலாவும், கட்சியின் முகமாக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் செயல்பட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கட்சியை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செயலாற்றிவருகிறார்.

அவருக்கு பக்கதுணையாக, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு, தியாகத்தாயின் பின்னால், நான் உள்பட தகுதிநீக்க நடவடிக்கைக்கு உள்ளான 18 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும், எண்ணிலடங்கா தொண்டர்களும் அணிவகுத்து நிற்கிறோம்.

ஆனால், எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சசிகலா குடும்பத்தை சார்ந்த திவாகரனும், ஜெய் ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது. சசிகலாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் டி.டி.வி.தினகரன் கட்சியை தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதிசடங்கில் கலந்துகொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்.

மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சசிகலா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்கு சென்றார். ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப்போன எடப்பாடி பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது, உண்மைக்கு புறம்பானது.

இதனை முதலில் சசிகலா ஏற்றுக்கொள்வாரா?. தங்களின் சுய லாபத்திற்காக கட்சியையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதீர்கள். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்.

எடப்பாடி பழனிசாமி அணி நிர்வாகியான சத்திரப்பட்டி சிவகிரி என்பவர், 18 சட்டமன்ற உறுப்பினர்களும் திவாகரன் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பதைப் போன்ற ஒரு பொய் பரப்புரையை செய்கிறார். இவர் யார் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறார் என்பதும் எங்களுக்கு தெரியும்.

இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்றை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் தலைமை சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் தான். இவர்கள் இருவரை தாண்டி, வேறு எவரின் கண்ணசைவுக்கும், குரலுக்கும் எங்கள் சிரம் அசையாது, எவருக்காகவும் எங்கள் தரம் மாறாது. எதுவரினும், எவர் எதிர்ப்பினும், எங்கள் பயணம் என்றும் சசிகலாவுடனும், டி.டி.வி.தினகரனுடனும் தான் என்பதில் மலையளவு உறுதியோடு இருக்கிறோம், காலத்துக்கும் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story