எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு மனு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
மாணவிகளை பாலியல் ஆசைக்கு வலைவீசியதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிரு பர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் ஒரு பெண் நிருபரின் கன்னத்தை தட்டியது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலைதளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்த்தரமான கருத்துகளை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு பத்திரிகையாளர்கள் உள்பட பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பெண்ணினத்தையோ, குறிப்பாக பத்திரிகையாளர் சமூகத்தையோ அவமதிக்கும் உள்நோக்கமோ அல்லது குற்ற எண்ணமோ எனக்கு எள்ளளவும் கிடையாது’ என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த மனுவில், ‘சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல் அப்படியே பதிவு செய்துவிட்டேன். வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story