விவசாய நிலத்தில் கிடந்த மனித மண்டை ஓடு-எலும்புகள் ஆவடி அருகே பரபரப்பு; போலீஸ் விசாரணை
ஆவடி அருகே விவசாய நிலத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவடி,
சென்னை ஆவடியை அடுத்த ஆலத்தூர் மேட்டுத்தும்பூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பல மாதங்களுக்கு முன் செங்கல் சூளைக்கு மண் எடுத்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த தண்ணீரில் மஞ்சள் நிற புடவை மற்றும் சிவப்பு நிற பாவாடை, ஜாக்கெட் போன்றவையும் மிதந்துகொண்டிருந்தது. அங்கு சில மனித எலும்புகளும் கிடந்தன.
அந்த இடத்தின் அருகில் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலத்தின் மேட்டுப்பகுதியில் மனித மண்டை ஓடு மற்றும் மார்பு எலும்புகள் கிடந்ததை நேற்று முன்தினம் மாலை அறுவடை செய்யவந்த சிலர் பார்த்தனர். இதையடுத்து நிலத்தின் உரிமையாளர் வெங்கடேசன் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ராஜலட்சுமிக்கு தகவல் கொடுத்தார். அவர் முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணை
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து பல நாட்களுக்கும் மேலாக ஆனதால் சதை பகுதிகள் அழுகி காணாமல்போய், மண்டை ஓடு மற்றும் சில எலும்புகள் மட்டும் இருப்பதும் தெரிந்தது. தகவல் கிடைத்த மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமாரி சம்பவ இடத்திற்கு விரைந்து எலும்புகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து எலும்புத் துண்டுகள் மற்றும் மண்டை ஓட்டை சேகரித்து ஆய்வுக் காக சென்னை தடய அறிவியல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணின் எலும்புகளா?
மண்டை ஓடு இருந்த இடத்தின் அருகில் முன்பு குட்டையில் புடவை, பாவாடை கிடந்ததால் ஒருவேளை மண்டை ஓடு மற்றும் எலும்புகள் ஒரு பெண்ணுடையதாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? என்பதும் மர்மமாக உள்ளது.
யாரேனும் பெண்ணை கடத்திவந்து கொலை செய்து சடலத்தை புதைத்துவிட்டு சென்றனரா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story