தமிழக சுகாதாரப்பணிகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்


தமிழக சுகாதாரப்பணிகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்
x
தினத்தந்தி 30 April 2018 11:00 PM GMT (Updated: 30 April 2018 9:17 PM GMT)

தமிழகத்தில் நடந்து வரும் சுகாதாரப்பணிகளை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

சென்னை, 

உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் ஜெ.செல்வகுமார் தலைமை தாங்கினார்.

விருது கையேட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மருந்தியல் துறை நிபுணர் பர்வதவர்த்தினி, ரத்தவியல் துறை நிபுணர் ராதாகிருஷ்ணன், இருதய நிபுணர் டாக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட டாக்டர்களுக்கு சிறந்த மருத்துவர் விருதுகளையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கி பேசியதாவது:-

நோய்களை கண்டுபிடிப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள மொத்த மருத்துவ சிகிச்சையில் 40 சதவீதம் தமிழகத்தில் தான் நடக்கிறது.

தமிழகத்தில் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருவதாக இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இருதய அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டில் வசூலிப்பதை விட இங்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் நடந்து வரும் சிறந்த மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதாரப்பணிகளை, பிற மாநிலங்களும் பின்பற்றி பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை அளிக்க முன்வர வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சி.எம்.கே.ரெட்டி, ஜெ.ஏ.ஜெயலால், டி.என்.ரவிசங்கர் உள்ளிட்ட பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஜான் தன்ராஜ் தொகுத்து வழங்கினார்.

Next Story