கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய மருத்துவ மாணவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய மருத்துவ மாணவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 April 2018 9:30 PM GMT (Updated: 30 April 2018 9:19 PM GMT)

கருணை மதிப்பெண் வழங்கக்கோரிய மருத்துவ மாணவியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவி ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு செமஸ்டர் கண் மருத்துவம் தேர்வில் தோல்வியடைந்தேன். மறுதேர்வு எழுதி, அதிலும் தோல்வியடைந்தேன். தேர்ச்சி மதிப்பெண் 32க்கு பதில் 3 மதிப்பெண் குறைவாக (29) எடுத்துள்ளேன். புதுச்சேரி பல்கலைக்கழக அறிவிக்கையின்படி 5 மதிப்பெண் வரை கருணை அடிப்படையில் வழங்கலாம். எனக்கு 3 மதிப்பெண் வழங்கினால் நான் தேர்ச்சியடைந்து 4-ம் ஆண்டு படிப்பை தொடருவேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு கருணை மதிப்பெண் வழங்க எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பிலும், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பிலும் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், மாணவியின் கோரிக்கையை ஏற்கமுடியாது என்றும் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டார்.

மேலும், ‘கருணை மதிப்பெண் மூலம் தேர்ச்சிபெற்ற டாக்டர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்தால், கண்டிப்பாக அந்த நோயாளியின் கண் பார்வை கடவுளின் கருணையால் தான் காப்பாற்றப்படும்’ என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

Next Story