ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை


ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 30 April 2018 9:26 PM GMT (Updated: 30 April 2018 9:26 PM GMT)

ஜனாதிபதி விருதுகள் பட்டியலில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயர்கல்வி கற்கும் இளம் கல்வியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்குவதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. தமிழை விட தகுதி குறைந்த மொழிகளில் ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும் போது, உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி பயிலும் இளம் கல்வியாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ் மொழி அறிஞர்களுக்கு விருது வழங்கும் விஷயத்தில் மத்திய அரசு செய்த துரோகத்தை விட, தமிழக அரசு செய்த துரோகம் மிகப்பெரியதாகும். தமிழை வளர்ப்பதில் தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் அப்போதே இந்த பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விருது வழங்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பதவியைக் காப்பாற்றிக்கொள்வதில் கவனம் செலுத்தும் அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை.

மொழி அறிஞர் விருதுகளைப் பொறுத்தவரை தமிழைத் தவிர்த்து விட்டு வேறு எந்த மொழியிலும் விருது வழங்க முடியாது. தமிழ் மொழி அறிஞர்களுக்குத் தான் முதலில் விருது வழங்கப்பட வேண்டும். எனவே, ஜனாதிபதி மற்றும் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கப்படும் மொழிகள் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடியும் நிலையில் தமிழ் மொழி விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசத்துடன் கூடிய புதிய அட்டவணையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story