தேர்தல் நேரங்களில் மாநில சுயாட்சி பற்றி பேசி மக்களை தி.மு.க. திசைதிருப்புகிறது


தேர்தல் நேரங்களில் மாநில சுயாட்சி பற்றி பேசி மக்களை தி.மு.க. திசைதிருப்புகிறது
x
தினத்தந்தி 1 May 2018 11:30 PM GMT (Updated: 1 May 2018 11:21 PM GMT)

தேர்தல் நேரங்களில் மாநில சுயாட்சி பற்றி பேசி மக்களை தி.மு.க. திசைதிருப்புகிறது என்று தம்பிதுரை கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது.

ஆலந்தூர்,

தி.மு.க. தற்போது பரிதாப நிலையில் உள்ளது. அவர்கள் நடத்திய போராட்டம் பிசுபிசுத்து போய்விட்டது. காவிரி பிரச்சினையில் தி.மு.க. துரோகம் செய்ததால் இந்த நிலைமைக்கு வந்துள்ளது. காவிரி பற்றி பேச தி.மு.க.வுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

தேர்தல் நேரங்களில் மட்டும் தி.மு.க.வுக்கு தமிழ், தமிழர், மாநில சுயாட்சி ஆகியவை பற்றி நினைவு வந்துவிடும். மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது மாநில சுயாட்சி, காவிரி பிரச்சினை பற்றி அந்த கட்சி நினைவுக்கு வரவில்லை. எதிர்க்கட்சி ஆனதும் தேர்தல் நேரங்களில் மக்களை திசைதிருப்ப மாநில சுயாட்சியை கையில் எடுத்துள்ளது.

பா.ஜனதாவா?, காங்கிரசா? 3-வது அணியா?, யாருடன் கூட்டணி என தி.மு.க. விளக்கம் அளிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்த்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மனு தந்ததா?, 3-வது அணி பா.ஜனதாவை எதிர்க்கிறதா? இல்லை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அ.தி.மு.க.வின் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். ஆட்சி நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. மாநில உரிமைகளை விட்டு கொடுத்தது தி.மு.க. தான். காவிரி பிரச்சினையின் போது ஜெயலலிதா உத்தரவிட்டதும் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். அ.தி.மு.க.வினர் பதவிக்காக அலைபவர்கள் இல்லை. மத்தியில் ஏதாவது பதவி கிடைக்குமா? என்று தி.மு.க. அலைந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story