ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன் தற்கொலை செய்த மாணவர் கடிதம்


ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன் தற்கொலை செய்த மாணவர் கடிதம்
x
தினத்தந்தி 2 May 2018 4:58 AM GMT (Updated: 2 May 2018 4:58 AM GMT)

நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்கு போட்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன் தற்கொலை செய்த மாணவர் கடிதம் எழுதி வைத்து உள்ளார்.

நெல்லை

டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் தினேஷ்  12ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவரின் தந்தை, கடந்த சில வருடங்களாக மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் தினேஷ் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் அவர்களின் குடும்பமும் வறுமையில் கஷ்டப்பட்டுள்ளது. அதோடு தினேஷ் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். 

கடிதத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட பிரதமர் மோடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். அப்படியும் டாஸ்டாக் கடைகள் மூடப்படவில்லை என்றால் ஆவியாக வந்து டாஸ்டாக் கடைகளை அழிப்பேன் என தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளார். இந்த மாணவர் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மகனுக்கு ஏற்படுத்திய அதிக பாதிப்பால் அவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story