மாவட்ட மைய நூலகங்களில் பள்ளி குழந்தைகளுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம்


மாவட்ட மைய நூலகங்களில் பள்ளி குழந்தைகளுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 2 May 2018 11:45 PM GMT (Updated: 2 May 2018 11:45 PM GMT)

நூலகங்களில் நடைபெறும் பள்ளி குழந்தைகளுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

கோடை விடுமுறையை பள்ளி குழந்தைகள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட மைய நூலகங்களில் மாணவர்களுக்கு இலவச பயற்சி முகாம் நடத்திட அரசு திட்டமிட்டது.

இந்த முகாமில் பள்ளி குழந்தைகளுக்கு யோகா, அறிவியல் செயல் திறன், ஆளுமைத்திறன், நினைவாற்றல் திறன் மேம்பாடு, நேர மேலாண்மை, ஒலி-ஒளி பற்றிய ஆய்வுகள், கதை சொல்லுதல், கற்பனை கதையை தமிழில் எழுதுதல், புத்தகம் வாசிப்பின் பயன்கள், ஓவியம் வரைதல் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் ஆகியவற்றோடு பல்லாங்குழி உள்ளிட்ட கிராமிய விளையாட்டுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சி முகாமை சென்னை அண்ணா நூற்றாண்டுவிழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்களின் எதிர் கால வாழ்வு பிரகாசமாக அமையவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கோடை கால முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. சிறந்த மற்றும் அறிவுத்திறன் மிக்க மாணவர்களை உருவாக்கவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமை சிறப்பாக வழிநடத்திட தன்னார்வ மற்றும் அறக்கட்டளை நிறுவனங்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி முகாம் இந்த மாத இறுதிவரை நடைபெறும்.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த பாடபுத்தகங்களை நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார்.

ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும்.

நீட் தேர்வு வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்குரிய பணிகள் தொடங்கிவிட்டன.

எனவே அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரி உள்ளோம். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு அரசு பயிற்சி மையங்கள் அமைத்ததன் காரணமாக 3 ஆயிரத்து 145 மாணவர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரங்களை அந்தந்த பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என்றும், அவ்வாறு ஒட்டாத பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.


Next Story