காவிரி பிரச்சினை: மத்திய அரசுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்


காவிரி பிரச்சினை: மத்திய அரசுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 3 May 2018 10:00 PM GMT (Updated: 3 May 2018 9:54 PM GMT)

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

மத்திய மந்திரிகளும், பிரதமரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் தான் வரைவுத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. கர்நாடக தேர்தல் வெற்றிக்காக காவிரி பிரச்சினையில் எத்தகைய துரோகத்தையும் செய்ய மத்திய அரசு தயங்காது.

காவிரி பிரச்சினையில் வரும் 8-ந் தேதியாவது தமிழகத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், அதைக்கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்து போராடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உரிய வழிகாட்டுதல் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்தால்தான் கர்நாடகாவில் உள்ள அணைகள் அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செல்லும். உச்சநீதிமன்றம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வெறும் கண்துடைப்பாகும்.

எனவே மத்திய அரசு, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே உரிய தீர்வாகும்.

தமிழக அரசின் செயல்பாடுகள் முழு தோல்வியை அடைந்துள்ளது என்பதை தான் மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் பெற முயற்சிப்பதன் மூலம் தெரிகிறது. தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமி, மவுனசாமியாக மாறியுள்ளதை இந்த மாநிலத்திற்கு ஏற்பட்ட அவமானமாக தான் பார்க்கிறோம். காவிரியின் உரிமையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்திடுவோம்.

வரைவுதிட்டம் தாக்கல் செய்யாமல் காலநீட்டிப்பு செய்வது என தமிழர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழர்களே கூட்டு முயற்சியாக ஓரணியில் ஒன்று திரண்டு போராட்டத்தினை தொடர வேண்டும். கேட்டுப்பெற முடியாத உரிமையை தொடர்போராட்டத்தின் மூலம் மட்டுமே பெறமுடியும்.

கர்நாடகத்தில் இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் போட்டியில் தமிழகத்தின் அடிப்படைத் தேவையான குடிநீரையும், பாசனத்தையும் பகடைக்காயாக வைத்து விளையாடி வருகிறது. மேலும் உச்சநீதிமன்றம் அளித்திருக்கின்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க வேண்டும்.

எனவே காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வரைவுத்திட்டத்தை சமர்ப்பிக்காத மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசு காவிரி நதியிலிருந்து 4 டி.எம்.சி. நீரை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் நாளை (இன்று) மாலை திருவண்ணாமலையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாராளுமன்ற தேர்தல் வரை தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் எந்த முடிவையும் பிரதமர் நரேந்திரமோடி எடுக்க மாட்டார் என்பதே உண்மை. மக்களின் போராட்டங்கள் தான் நம்முடைய உரிமைகளை மீட்டெடுக்கும். எனவே வலுவான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க தமிழக மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

மத்திய அரசின் தமிழக விரோத போக்கினை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும், பொது மக்களையும் கேட்டுக்கொள்கிறோம். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சாகுபடியாவது நடக்குமா என்பது கேள்விகுறியாக மாறி விட்டது. எனவே இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கும் வகையில், கர்நாடக அரசிடம் தண்ணீரை பெற்றிட உரிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு மிக, மிகக் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவது மிக கடுமையான கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையில், மாநில அரசு விட்டுக்கொடுத்து, மத்திய அரசின் முடிவுகளுக்கு ஏற்ப இசைவாக செயல்பட்டு வருவது மத்திய அரசின் துரோகத்தை விட பெரும் துரோக செயலாகும். மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தனத்திலிருந்து காவிரி உரிமையை பாதுகாக்க தமிழக மக்கள் அனைவரும் ஒருமித்தக் குரல் எழுப்ப முன்வர வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்துவிட்டது. மக்கள் போராட்டத்தை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு கடுமையான நடவடிக்கைளில் ஈடுபடாமல் மத்திய அரசுக்கு இணக்கம் என்ற சாக்கில் எந்த கிளர்ச்சிக்கும் மறுத்து விட்ட காட்சி தான் நாம் காணும் வெட்கப்படும் நடைமுறை. ஒத்தக்கருத்து உள்ளவர்கள் களம் காண மீண்டும் ஆர்த்தெழுவதை தவிர வேறு வழிகள் தான் என்ன? யோசிக்க வேண்டும்.

கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு தமிழக விவசாயிகளின் எண்ணங்களை குழி தோண்டி புதைக்கும் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தினால் உச்சக்கட்ட எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Next Story