ஒரு பெண் குழந்தைக்கு கல்வி அளித்தால் 2 குடும்பங்கள் பயன் அடையும்


ஒரு பெண் குழந்தைக்கு கல்வி அளித்தால் 2 குடும்பங்கள் பயன் அடையும்
x
தினத்தந்தி 5 May 2018 11:45 PM GMT (Updated: 5 May 2018 8:54 PM GMT)

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தால் 2 குடும்பங்கள் பயன் அடையும் என்று சென்னை கல்லூரி விழாவில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் ஹர்பன்ஸ் சிங் ஆனந்த் தலைமை தாங்கினார். தொடர்ந்து கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அவருடைய மனைவி சவீதா கோவிந்த் விழாவுக்கு முன்னிலை வகித்தார்.

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 12 மாணவ, மாணவிகளுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி பேசியதாவது.

கல்லூரியில் 900 மாணவர்கள் பட்டம் பெற்றிருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்களின் மிகச்சிறந்த சாதனையாகும். பட்டம் பெற்ற மாணவர்கள் கல்லூரியின் வளமான பாரம்பரியத்தை உலகிற்கு கொண்டு செல்வதை நான் விரும்புகிறேன். பட்டம் பெற்றவர்களில் 3-ல் ஒரு பங்கு மாணவிகள். பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 12 மாணவர்களில் 7 பேர் மாணவிகள். இவை வெறும் புள்ளி விவரங்கள் தான். பெண் குழந்தைக்கு கல்வி அளிப்பதன் மூலம் 2 குடும்பங்கள் பயன் அடைகின்றன. கல்வி அறிவு பெற்ற பெண் தன்னுடைய பெற்றோர் குடும்பத்தாருக்கும், கணவன் குடும்பத்தினருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறார். குறிப்பாக வேலை செய்யும் இடத்திலும், பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதிலும் படித்த பெண்கள் தங்கள் பங்களிப்பை முழுமையாக செலுத்துகின்றனர்.

சுதந்திர போராட்டத்தின் போது தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் முன்னணியில் இருந்தன. சுதந்திரத்திற்கு பிறகு இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள கடின உழைப்பாளர்கள் நம் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தங்களுடைய முழு பங்களிப்பை செலுத்தினார்கள். சீக்கிய சமுதாயத்தினர் தமிழ்நாட்டில் வணிகம், தொழிற்சாலை மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த கல்லூரியில் 700 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது சிறப்பாகும்.

கல்வியின் மதிப்பு என்பது வேலைக்காகவும், பட்டம் பெற்று பயிற்சி பெறுவதற்காகவும் அல்ல. நாம் கற்ற கல்வி மூலம் சமுதாயம் மேம்பட உதவ வேண்டும். இதற்காக இந்த கல்லூரி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளிகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. சிறப்பு குழந்தைகளுக்கு சான்றிதழ் வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்த வேண்டும். மாணவர்கள் கல்வி பணியுடன் சமுதாய பணியிலும் ஈடுபட வேண்டும். குறிப்பாக கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது வேளச்சேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்த கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 250 பேர் கொண்ட குழுவினரின் நிவாரணப் பணி பாராட்டுக்குரியது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பழமையான மற்றும் பாரம்பரியமான கட்டிடமாகும். இதனை பார்வையிட அனைவரும் வரலாம்.

முன்னதாக கல்லூரி முதல்வர் எம்.செல்வராஜ் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி, கல்லூரி பொதுச்செயலாளர் மன்ஜித் சிங் நாயர், ஆகியோர் பங்கேற்றனர். கல்லூரி இயக்குனர் குனிட்டா அருண் சாந்தோக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆடிட்டர் குருமூர்த்தி, இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, முன்னாள் எம்.பி. பல்பீர் பூஞ்ச் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story