கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கோவில் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2018 10:15 PM GMT (Updated: 5 May 2018 9:35 PM GMT)

கோவில் சொத்துகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 சென்ட் இடத்தை வீரபத்திரன், முத்து ஆகியோருக்கு கோவில் நிர்வாகம் குத்தகைக்கு விட்டது. இந்த குத்தகையை கடந்த 1989-ம் ஆண்டு அவர்கள் சாகுல் அமீது, அப்துல் கரீம் ஆகியோருக்கு மாற்றம் செய்து கொடுத்தனர்.

இந்தநிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை சாகுல் அமீது, அப்துல் கரீம் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அந்த இடத்தை காலி செய்ய கோவில் செயல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2011-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சாகுல் அமீது உள்ளிட்ட இருவரும் சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மேல் முறையீடு செய்தனர். இணை ஆணையரின் உத்தரவை உறுதி செய்து 2013-ம் ஆண்டு ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், குத்தகை மாற்றம் தொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் மகாராஜன், ‘வீரபத்திரன், முத்து ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட குத்தகை மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. அந்த குத்தகையை வேறு நபருக்கு மாற்றம் செய்ய முடியாது. அப்படி மாற்றம் செய்தாலும் அது செல்லுபடியாகாது. எனவே, மனுதாரர்கள் அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்ததாக உரிமை கோர முடியாது’ என்றார். இதைத்தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

இந்து அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் குத்தகையை மாற்றம் செய்வது குத்தகை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு எதிரானது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கோவில் சொத்துகளை அனுபவிப்பது என்பது ஆக்கிரமிப்பாகும். எனவே, மனுதாரர்களுக்கு எதிராக இந்து அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து கோவில்களிலும் உள்ள சொத்துகளை பாதுகாக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் உரிய உத்தரவு பிறப்பித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story