காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 5 May 2018 10:00 PM GMT (Updated: 5 May 2018 10:00 PM GMT)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரி கொடா இயக்க போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 35-வது வணிகர் தின மாநாடு, ‘இந்திய வணிகர் உரிமை மீட்பு’ என்ற தலைப்பில் சென்னையை அடுத்த வேலப்பன் சாவடியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தித்தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மாவட்ட தலைவர் கொளத்தூர் ரவி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், துணை தலைவர் எச்.வசந்தகுமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தே.மு.தி.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ., அபுபக்கர், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தொழில் அதிபர்கள் வி.ஜி.பி. ராஜாதாஸ், ‘ஆச்சி மசாலா’ பத்ம சிங் ஐசக் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு.

* நிரந்தர உணவு பாதுகாப்பு தரநிர்ணய உரிமம் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும்.

* சிறு-குறு வணிகர்களுக்கு ‘இ-வே’ பதிவு மையங்கள். வங்கி கடன் உதவி மையங்கள் திறக்க வேண்டும்.

* நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். அவசியமற்ற கடை அடைப்பை தவிர்க்க வேண்டும். தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தப்பட வேண்டும். வணிகர் குடும்பத்துக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும்.

* ஜி.எஸ்.டி. பதிவு செய்துள்ள வணிகர்களுக்கும் ஓய்வூதியம் அளித்திட வேண்டும்.

* பொட்டல பொருட்களுக்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். எடையளவு தண்டனை சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அறநிலைய- உள்ளாட்சித்துறை கடைகள் வாடகை நிர்ணயம், பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

* காவிரி மேலாண்மை வாரியம், தேசிய நதிகள் இணைப்பு, மழைநீரை வீணாக்காமல் தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் வரிகொடா இயக்க போராட்டம் முன்னெடுக்கப்படும். இளைய வணிக தலைமுறைகள் உருவாக்கத்துக்கு ஊக்குவிக்க வேண்டும். வணிக நிதி மையங்கள் அமைக்க வேண்டும்.

* அத்தியாவசிய உணவு பொருளான அரிசிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

* வேளாண் உற்பத்தி மையங்களை தவிர்த்து இதர இடங்களில் செஸ் வரி வசூலிப்பை தவிர்த்திட வேண்டும். விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி விலையில் 50 சதவீதம் உயர்வு அளிக்க வேண்டும்.

* விற்பனைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடை செய்ய வேண்டும்.

* வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட வேண்டும்.

* டீசல்-பெட்ரோல் எரிப்பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.

* பனைமரம் மற்றும் அதைச் சார்ந்த கிராமிய தொழில்கள், தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

* கட்டுமான தொழில் செழிக்க, நிலத்தடி நீரைப் பெருக்க, அயல்நாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வணிகர்கள் தின மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள், தோரணங்கள் என்று வேலப்பன் சாவடி பகுதி விழா கோலம் பூண்டிருந்தது. வணிகர் தினத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய மாநாட்டில் பேரமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் மறைந்த க.மோகனுக்கு நினைவரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரது நினைவாக வணிகர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த ஊக்கத்தொகையை நடிகர் கமல்ஹாசன் வழங்கினார். மேலும் மூத்த வணிகர்களுக்கு வணிக விருதுகளும் வழங்கப்பட்டன.

அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால் பாராட்டுரை வழங்கி பேசுகையில், “மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பிரதமர், நிதி மந்திரி உள்ளிட்டோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்” என்றார். மாநாட்டின் இறுதியில் பேரமைப்பின் சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.


Next Story