ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதுக்கு கட்சித்தலைவர்கள் கண்டனம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதுக்கு கட்சித்தலைவர்கள் கண்டனம்
x
தினத்தந்தி 7 May 2018 8:52 PM GMT (Updated: 7 May 2018 8:52 PM GMT)

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்களின் போராட்டத்தை களைய வேண்டுமானால், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சரோ, முதல்-அமைச்சரோ பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதை போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதை ஏற்க முடியாது. அரசு ஊழியர் ஊதியம் உயர்த்தப்பட்டது பிரச்சினையில்லை. அதற்கு இணையாக அரசின் வருமானத்தை உயர்த்தாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும்.

இதையெல்லாம் மறைத்துவிட்டு, அரசின் தோல்வியை அதிகாரிகள் மீது சுமத்தி சிக்கலை திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பு தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்து உள்ளனர். போராட்டத்துக்கு வந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாகனங்கள் வழியிலேயே பறிமுதல் செய்யப்பட்டு அவர் களை மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ள கொடுமை நடைபெற்று வருகிறது. இத்தகைய அரசின் மோசமான நடவடிக்கைகள் அரசின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எனவே இதனை தவிர்த்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(இன்று) ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில், திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை த.மா.கா. வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Next Story