தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை ஆலோசனை


தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 20 May 2018 11:30 PM GMT (Updated: 20 May 2018 9:22 PM GMT)

காவிரி பிரச்சினையில் அடுத்தக்கட்டம் குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சென்னை,

காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி போராட்டங்களை முன் எடுத்தது.

இந்தநிலையில் காவிரி வழக்கில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றத்தில் வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையே, வரும் ஜூன் 12-ந்தேதிக்குள் கர்நாடகாவிடம் இருந்து உரிய தண்ணீரை பெற்று, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறக்க வேண்டும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பு ஆகியவற்றை குறித்து விவாதிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.

இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். காங்கிரஸ் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க மேலும் சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகளையும் தாண்டி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story