கோட்டையை நோக்கி நாளை பேரணி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திட்டம்


கோட்டையை நோக்கி நாளை பேரணி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திட்டம்
x
தினத்தந்தி 22 May 2018 9:41 PM GMT (Updated: 22 May 2018 9:41 PM GMT)

தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கி சூட்டை கண்டித்து, நாளை(வியாழக் கிழமை) கோட்டை நோக்கி பேரணி நடத்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.

சென்னை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் குறித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி-அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் நிறைவில் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இதுகுறித்து பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் 24-ந்தேதி(நாளை) கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story