தூத்துக்குடியில் வரும் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு


தூத்துக்குடியில் வரும் 27-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 May 2018 4:49 PM GMT (Updated: 24 May 2018 5:22 PM GMT)

தூத்துக்குடியில் வரும் 27-ம்தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. #Thoothukkudi #Sterlite #SandeepNanduri

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களில் நேற்று ஒருவர் இறந்தார். மேலும் நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் இன்று  உயிரிழந்து உள்ளார்.  இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.

தூத்துக்குடியில் கலவரம் பரவிடாமல் தடுப்பதற்காக 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.  இந்தநிலையில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடியில் நாளை காலை 8 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில் 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், ஊர்வலமாக செல்லுதல், பொதுக்கூட்டம் நடத்துதல், சைக்கிள், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மூலம் பேரணியாக வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் சாதி கொடி கம்புகள் மற்றும் இதர ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள பொதுமக்களை அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story