குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கீதா ஜீவன் எம்.எல்.ஏ. பகிரங்க சவால்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எனது பெயரில் லாரிகள் ஓடுகிறது என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு, கீதா ஜீவன் எம்.எல்.ஏ. பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
சென்னை,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவர் பெயரில் 600 வண்டிகள் ஓடுவதாகவும், அதேபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, ‘1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்க தொடங்கியபோது ‘எல் அண்டு டி’ நிறுவனத்துக்காக எனது மருமகன் ‘வெல்டிங் ராடு’ வேலைகள் செய்து கொடுத்ததார். 2002-ம் ஆண்டுக்கு பின்னர் எனது மருமகன் ‘எல் அண்டு டி’ ‘ஸ்டாக்கிஸ்டு’ உரிமையையே வேண்டாம் என்று விலக்கிக்கொண்டார்’ என்று கூறினார்.
இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தும், அதனை நிரூபித்தால் பதவி விலக தயார் என்றும் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கீதா ஜீவன் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான தகவல்களை கூறியிருக்கிறார். அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படியொரு அப்பட்டமான பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எதுவும் எடுக்கவில்லை.
என்னுடைய, எங்கள் குடும்பத்தினருடைய லாரிகள் எதுவும் அங்கு ஓடவில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ.வான என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியிருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்தை நிரூபித்தால் நான் பதவி விலக தயார். உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story